கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி; காப்பாற்ற முயன்ற பெண்ணும் சாவு

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானாள். அவளை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-07-05 12:29 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானாள். அவளை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலி வேலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமி நாராயணபுரம் ஆர்.எஸ்.மணிநகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி மலர் (வயது 31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்- மனைவி கரும்பு ஆலைகளுக்கு அரவைக்கு கரும்பு வெட்டும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு வந்தனர். இங்கு இவர்களின் உறவினர்கள் உள்ளனர்.

கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர்

சிவகிரி அருகே உள்ள ராஜசிங்கப்பேரி கண்மாய் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் ஏழுமலை, மலர் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்ததும் அருகே உள்ள முடுக்காங்கரையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மலர் குளிக்க சென்றார். அவருக்கு பின்னால் உறவினரான கார்த்திக் என்பவருடைய மகள் ஜீவஸ்ரீ (4) என்ற சிறுமியும் சென்றாள்.

இளம்பெண்-சிறுமி சாவு

2 பேரும் கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஜீவஸ்ரீ தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தாள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மலர், சிறுமியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். ஆனால், மலருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் மலர், ஜீவஸ்ரீ ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே, குளிக்க சென்ற மலரையும், சிறுமியையும் காணவில்லை என மலரின் கணவர் உள்பட வேலை செய்து கொண்டிருந்த உறவினர்கள் தேடிச் சென்றனர். அங்கு கிணற்றின் படிக்கட்டில் மலர் கொண்டு சென்ற சில பொருட்கள் இருந்ததை கண்டு, சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு

இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் கனகவல்லி, ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் வாசுதேவல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் வீரர்களும் விரைந்து வந்தனர்.

அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி நீண்ட ேநரத்திற்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது மலர், சிறுமி ஜீவஸ்ரீ ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி இருந்தனர். இதை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் கண்கலங்கினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி அருகே அருகே கிணற்றில் மூழ்கி சிறுமி, இளம்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்