ரத்த கொடையாளர்களுக்கு பரிசு, சான்றிதழ்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த கொடையாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை மருத்துவ அதிகாரி வழங்கினார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த கொடையாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை மருத்துவ அதிகாரி வழங்கினார்.
சான்றிதழ் வழங்கும் விழா
உலக ரத்த தான தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆஸ்பத்திரி மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவண பிரகாஷ் சான்றிதழை வழங்கினார். ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்த 15 பேருக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. மேலும் ரத்த தானம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் டாக்டர் வாணி, ரத்த வங்கி டாக்டர்கள் மாரிமுத்து, பிரியதர்ஷினி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
350 மில்லி லிட்டர்
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
அரசு ரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும். மேலும் அரசு ரத்த வங்கிகள் நடத்தும் சிறப்பு முகாம்களிலும், அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களிலும் ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால் மாரடைப்பு குறைகிறது. புதிதாக ரத்த அணுக்கள் உருவாக ஊக்கவிக்கிறது. ஒவ்வொருடைய உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். இந்த ரத்தமும் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் உடலால் ஈடு செய்யப்படுகிறது. 3 மாதத்திற்கு ஒருமுறை தாராளமாக ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதற்கு 20 நிமிடங்களேபோதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.