கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

Update: 2022-09-28 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிகள்

உலக சுற்றுலா தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில், சுற்றுலா மறுசிந்தனை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரன்குமார், மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசு, சான்றிதழ்

கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த ராஜம்மா, 2-ம் இடம் பிடித்த தர்ஷினி, 3-ம் இடம் பிடித்த மேரிஜெனி, பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த தேவிகா, 2-ம் இடம் பிடித்த அகல்விழி, 3-ம் இடம் பிடித்த ஜெனிடாபெத், ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்த தெய்வானை, 2-ம் இடம் பிடித்த பிரித்திகா, 3-ம் இடம் பிடித்த பிரார்த்தனா ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய விஜயலட்சுமி, அனுசுயாபாய் ஆகியோருக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்