அரசலாறு- நாட்டாற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகள்
கும்பகோணத்தில் அரசலாறு மற்றும் நாட்டாற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள்.;
கும்பகோணம்;
கும்பகோணத்தில் அரசலாறு மற்றும் நாட்டாற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கிளை ஆறுகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்கின்றன. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும்.மேலும் வாழை, உளுந்து, எள், நிலக்கடலை, தென்னை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 75 சதவீத விவசாயிகள் ஆற்றுப்பாசனம் மூலமாகவே சாகுபடி செய்து வருகின்றனர். மிக குறைந்த எண்ணிக்கையில் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் பாசனம் நடக்கிறது. குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
5 கிளைகள்
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய காவிரி ஆறு தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. இந்த ஆறுகளில் இருந்தும் வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆறு என பல்வேறு கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்திற்குள் நுழையும்போது 5 கிளைகளாக பிரிகிறது. இவற்றில் ஒன்று அரசலாறு ஆகும்.
கொட்டப்படும் குப்பைகள்
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் தொடங்கி கும்பகோணம் வழியாக பயணித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை அரசலாறு செல்கிறது. இந்த ஆறு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாக நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இந்த தண்ணீர் பயன்பட்டு வருகிறது. புனித நதியாக பாவிக்கப்பட்டு வரும் இந்த அரசலாறு தனது புனித தன்மையை இழந்து வருகிறது.பல இடங்களில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆற்றில் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக இங்கு இறைச்சி கழிவுகள் தான் அதிக அளவில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.
இறைச்சி கழிவுகள்
இறைச்சிக்கழிவுகள் பாரதி நகரில் அரசலாறில் இருந்து பிரிந்து செல்லும் நாட்டாறு கரையில் தான் அதிகளவில் கொட்டப்படுகின்றன. அதுவும் இரவு நேரத்தில் சரக்கு ஆட்டோக்களில் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அரசலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி இனி வரும் நாட்களில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வார கோரிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறும்போது
அரசலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் வரும்போது குப்பைகளும் மிதந்து விளைநிலங்களுக்கு வந்து விடுகிறது. இவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இருப்பதால் இவைகள் விளைநிலத்தை பாழாக்கும். எனவே அரசலாறு உள்பட நீர்நிலைகளில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தை சீரமைப்பதுடன் அரசலாற்றையும் தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.