கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு- மதுரை கோர்ட்டு உத்தரவு
கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது;
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-சேந்தப்பூமங்கலம் இடையிலான சாலையில் ஆத்தூர் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பயணித்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் வந்த வாகனத்தில் 294 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சாவை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கஞ்சா கடத்தல் வழக்கை 6 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் (தற்போது கோவில்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்) தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார்.