ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தியவர் கைது
அரூர் பஸ் நிலையத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்துள்ளார்.;
அரூர்:
கஞ்சா சிக்கியது
தர்மபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அரூர் பஸ் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 54) என்று தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு மேல் என்று கூறப்படுகிறது. அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இது தொடர்பாக அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. ரெயில் மற்றும் பஸ்சில் மாறி மாறி பயணம் செய்து தேனி மாவட்டத்திற்கு அவர் கஞ்சாவை கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர். அவருக்கு கஞ்சாவை வழங்கியது யார்? இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.