இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் கஞ்சா பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-05-13 19:00 GMT

வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல்

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதனை கண்காணித்து தடுக்கும் முயற்சியில் தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடியில் இருந்து படகு மூலமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காரில் சோதனை

அதன்பேரில் நேற்று அதிகாலை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விழுந்தமாவடி சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள கடற்கரையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரில் சோதனை செய்தனர்.

அந்த காரில் பண்டல், பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் விழுந்தமாவடியை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது45), கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த சிவக்குமார் (47) ஆகியோர் என்பதும், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை, விழுந்தமாவடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயற்சி செய்ததும் தெரியவந்தது.

ரூ.12 லட்சம் கஞ்சா

இதையடுத்து காரில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 30 கிலோ உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கோடீஸ்வரன், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோடீஸ்வரன், சிவக்குமார் ஆகியோரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் காரையும் நாகை மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாராட்டு

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கஞ்சா கடத்தல் காரர்களை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்