காட்பாடி ரெயில் நிலையத்தில் கஞ்சா சாக்லேட், போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒடிசா இளைஞர் கைது
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 கிலோ கஞ்சா கலந்த போதை சாக்லேட் மற்றும் 175 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே சந்திப்பின் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒடிசா மாநிலத்தில் கர்நாடகா வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 மூட்டை மற்றும் 4 பெரிய பைகளை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது, அந்த பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள், சாதாரண சாக்லேட் போன்று பேக் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 175 கிலோ குட்கா மற்றும் 40 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கடத்திச் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜய்குமார் என்ற இளைஞரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.