சரக்கு வாகனத்தில் ரகசியமாக கஞ்சா கடத்திய கும்பல் கைது - 50 கிலோ கஞ்சா பறிமுதல்...!
சென்னைக்கு சரக்கு வாகனத்தில் ரகசியமாக கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பல்வேறு வழிகளில் நூதன முறையில் கஞ்சா கடத்தி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இந்த நிலையில் முத்தியால்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு சென்னை முத்தியால் பேட்டை போலீசார் ஸ்டான்லி மருத்தவமனை ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது லோடு வேன் காலியாக இருந்தது. லோடு வேனின் டிரைவர் மற்றும் ஆட்களிடம் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததின் பேரில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்து வண்டியில் வந்த டிரைவர் உட்பட மூன்று பேரையும் லோடு வேன் உடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முழுமையாக வண்டியை சோதனை செய்த போது காலி வண்டியில் 'புஷ்பா' சினிமா பட பாணியில் டிரைவர் முன்பக்கம் டேஷ் போர்டில் 25 பண்டலாக 50 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அணில் குமார் (வயது 24), உப்பூல ரெட்டி அஞ்சி(34), கொண்டல் ரெட்டி (32) என்பதும் இவர்கள் நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் முத்தியால் பேட்டை போலீசார் கைது செய்து இவர்களிடமிருந்து 50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் லோடு வேனை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.