விநாயகர் சிலை ஊர்வலம்; கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்தது ஐகோர்ட்டு மதுரை கிளை

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

Update: 2022-08-31 06:57 GMT

மதுரை,

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

அதே போன்று நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்நிலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்றும், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, அநாகரிகமான உரையாடல்களோ இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது.

மேலும், அரசியல் கட்சி அல்லது மதம், சமூகத்தை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது என்றும், அரசியல் கட்சிகள் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மனுதாரர், விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றும், நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால், நிகழ்ச்சியை நிறுத்த சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்