நெல்லை மேலப்பாளையத்தில் விநாயகர் சிலை உடைப்பு இந்து முன்னணியினர் போராட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2022-07-08 20:28 GMT

நெல்லை மேலப்பாளையத்தில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சிலை உடைப்பு

நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் பழமைவாய்ந்த மந்திரமூர்த்தி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் விநாயகர் சிலை இருந்தது. இந்த கோவிலில் வருசாபிஷேகம் மற்றும் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

இந்து முன்னணியினர் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர்கள் சுடலை, ராஜசெல்வம் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். அவர்கள் கோவில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கோவிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து திட்டமிட்டப்படி நாளை வருசாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து 2 அடி உயர புதிய விநாயகர் சிலையை கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அங்கு வைக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விநாயகர் சிலையை உடைத்த மர்மநபர்களை பிடிக்க, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

விநாயகர் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மேலப்பாளையம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்