பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருக்கோவிலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லூர் ஏரியில் கரைக்கப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

திருக்கோவிலூர்

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் இந்து முன்னணி போன்ற பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பின்னர் இந்த சிலைகளை 3-வது அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 600 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சில பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சிலை அமைப்பாளர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீா் நிலைகளில் கரைத்தனர்.

திருக்கோவிலூர் பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட்டது.

திருக்கோவிலூர் பகுதியில்

முன்னதாக திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து விசுவ இந்து பரிஷத் சார்பில் அமைக்கப்பட்ட 10 அடி உயர விநாயகர் சிலை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக வாகனங்களில் கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டு கிழக்கு தெரு, தெற்கு தெரு வழியாக இரட்டை விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரை மூலையை வந்தடைந்தது. ஊர்வலம் வரும் வழிதோறும் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்திக்கு வாங்கியிருந்த விநாயகர் சிலைகளையும் கொண்டு வந்து ஊர்வலத்தில் சேர்த்தனர். அதேபோல் சந்தப்பேட்டையில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமும் ஏரிக்கரை மூலைக்கு வந்து சேர்ந்தது.

பிரம்மாண்ட ஊர்வலம்

பின்னர் இங்கிருந்து பிரம்மாண்ட ஊர்வலம் புறப்பட்டு மேல வீதி, திருக்கோவிலூர் பஸ் நிலையம், ஹாஸ்பிடல் ரோடு, நான்கு முனை சந்திப்பு, தென்பெண்ணையாற்று மேம்பாலம் வழியாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அழகானந்தல் ஏரியை சென்றடைந்தது.

பின்னர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை கரைக்கும் குழுவினரிடம் விநாயகர் சிலைகளை ஒப்படைத்தனர். சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. சிலைகள் கரைத்து முடிந்ததும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். ஊர்வலத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் புவனேஸ்வரி, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட நிர்வாகி ராமராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நின்றிருந்தனர். ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்