களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையே வைத்து வழிபட வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆகியோர் பேசியதாவது:-
அனுமதி இல்லை
விநாயகர் சிலை வைக்க முன்கூட்டியே சம்மந்தப்பட்ட சப்-கலெக்டர் அல்லது கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்றுடன் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் அரசு இடமாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறையினரிடம் தடையின்மை சான்று பெறவேண்டும். ஒலிபெருக்கி வைக்க காவல்துறையிடமும், தீ பாதுகாப்பு குறித்து தீயணைப்புத் துறையிடமும் அனுமதி பெறவேண்டும்.
நீரில் கரையக்கூடிய களிமண் மற்றும் நச்சு தன்மையற்ற இயற்கை சாயங்கள் கொண்டு செய்யப்பட்ட சிலைகளையே வைத்து வழிபட வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகள் வைக்க அனுமதி இல்லை.
5 நாட்களுக்குள்
சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாகவோ பதாகைகளை வைக்கக்கூடாது.
பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை கரைப்பதற்கான வாகன ஊர்வலம் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லவேண்டும். மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்லவேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சங்கவி, பொதுப்பணித்துறை(நீர்வளம்), காவல்துறை, விநாயகர் சதுர்த்தி விழா அமைப்புகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.