கறம்பக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

கறம்பக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Update: 2022-09-03 18:26 GMT

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

கறம்பக்குடியில் இந்து முன்னணி சார்பில் சீனிக்கடை முக்கம், பஸ்நிலையம், சடையன்தெரு, கணக்கர் தெரு, தெற்கு யாதவர் தெரு, நரங்கியப்பட்டு கள்ளர்தெரு, நரங்கியப்பட்டு கோனார் தெரு, சுக்கிரன்விடுதி ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பதற்காக நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

அக்னி ஆற்றில் கரைப்பு

இதையொட்டி அந்தந்த பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதிக்கு வந்தன. அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த ஊர்வலத்தை பா.ஜனதா மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார். இதையடுத்து அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. அப்போது திருநங்கைகள் காளி, கருப்பர் வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலம் சீனிக்கடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டாரதெரு, பள்ளிவாசல்தெரு, பஸ் நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை சாலை வழியாக சென்று திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

குன்னத்தூர், மலம்பட்டி

விராலிமலை ஒன்றியம், குன்னத்தூர், மலம்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் குன்னத்தூரில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அதனைதொடர்ந்து விநாயகர் சிலை டிராக்டரில் ஏற்றப்பட்டு மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க குன்னத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

மலம்பட்டியில் உள்ள விநாயகர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. பின்னர் அந்த சிலை வாகனத்தில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊரணியில் கரைக்கப்பட்டது.

மாத்தூர், மதயானைப்பட்டி

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அண்ணா நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் மாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று விமான நிலையம் பால்பண்ணை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரியில் கரைக்கப்பட்டது. மாத்தூர் இறைவன் நகரில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய பொதுமக்கள் இந்து சமுதாயத்தினருடன் இணைந்து வழிபாடு நடத்தியதுடன் விநாயகர் ஊர்வலத்திலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விராலிமலை ஒன்றியம் மதயானைப்பட்டி, சூரியூர், வில்லாரோடை, ஆலங்குடி, மண்டையூர், பிடாரம்பட்டி உள்பட 18 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் கடைவீதியில் கடந்த 5 நாட்களாக விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஊர்வலம் நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் தேரோடும் கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, கடைவீதி வழியாக சென்று சிவன் கோவிலை சுற்றி வந்த பிறகு தெப்பக்குளத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

இதேபோன்று திருவரங்குளம் தோப்புக்கொள்ளை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருந்தும், தோப்பு கொள்ளை கிராமத்தில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.

500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

கறம்பக்குடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் சிலை உடைப்பு, கலவரம், போலீஸ் தடியடி போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 28 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலத்தின் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி கறம்பக்குடியில் உள்ள 6 டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதேபோல் கறம்பக்குடி கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஊர்வல பாதையில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மேலும் டிரோன் கேமரா மூலமும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

பள்ளிவாசல் முன்பு போலீசார் குவிப்பு

கறம்பக்குடியில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் பள்ளிவாசல் முன்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்