பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதையொட்டி முக்கிய தெருக்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Update: 2022-09-02 12:49 GMT

வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதையொட்டி முக்கிய தெருக்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

விநாயகர் சிலை ஊர்வலம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. வேலூரில் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஊர்வலம் தொடங்கியது.

இதையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா (பொறுப்பு), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 3 டிரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. ஊர்வலத்தை அப்பாஜி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

கடைகள் அடைப்பு

ஊர்வலம் வேலூர் ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை வழியாக சென்று சைதாப்பேட்டை மெயின் பஜார், லாங்குபஜார் வழியாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் வந்து அங்கிருந்து கோட்டை சுற்றுச்சாலை வழியாக சென்றது.

ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் விநாயகர் சிலைகளை வணங்கினர். தங்கள் வீடுகளில் வைத்து வணக்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் வைத்தனர்.

ஊர்வலத்தை முன்னிட்டு வேலூர் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. அதன்படி சைதாப்பேட்டை மெயின் பஜார் பகுதி உள்பட முக்கிய தெருக்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். பரபரப்பாக காணப்படும் சைதாப்பேட்டை மெயின்பஜார் ஊர்வலத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது. ஊர்வலம் செல்லும்போது பலர் விடுதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

சதுப்பேரி ஏரியில் கரைப்பு

ஊர்வலத்தின் முன்னேயும், பின்னேயும் போலீசாரின் வாகனங்கள் சென்றது. ஆம்புலன்சும் ஊர்வலத்தின் பின்னே சென்றது. ஊர்வலம் பெங்களூரு சாலை ரெயில்வே கேட்டை தாண்டியதும் நேராக செல்ல இந்து முன்னணியினர் முற்பட்டனர். ஆனால் அங்கு போலீசார் அதிகளவில் நின்று பேரிகார்டுகளை வைத்து தடுத்து ஊர்வலத்தை சர்வீஸ் சாலைக்கு திருப்பிவிட்டனர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல கொணவட்டம், முள்ளிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பெங்களூரு சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. சதுப்பேரி ஏரியில் கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி நகரின் முக்கிய இடங்களிலும், ஊர்வல பாதைகளிலும் 700-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல்படையினர், பயிற்சி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்