ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்-காமராஜ் அணையில் 81 சிலைகள் கரைப்பு

ஊட்டியில் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 81 விநாயகர் சிலைகள் காமராஜ் அணையில் கரைக்கப்பட்டது.

Update: 2023-09-21 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 81 விநாயகர் சிலைகள் காமராஜ் அணையில் கரைக்கப்பட்டது.

ஊர்வலம்

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னனி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சார்பில் சுமார் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி, தரிசனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் ஊட்டியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 90 சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன.

81 சிலைகள் 

இந்த நிலையில் நேற்று விசுவ இந்து பரிஷத் சார்பில், 2-வது நாளாக விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊட்டி தேவாங்கர் மண்டபத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 81 சிலைகள், வேன்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேளதாளம் முழங்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலம் நடந்தது. இதன்பின்னர் ஊட்டி அருகே காமராஜ் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படை போலீசார், ட்ரோன் கேமரா கண்காணிப்பு உள்ளிட்டவையும் இருந்தது.

போக்குவரத்து மாற்றம்

இதைத்தொடர்ந்து காமராஜர் அணைக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படகு மூலம் அணையில் கரைக்கப்பட்டன. வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகளும் கரைக்கப்பட்டது. ஊட்டியில் விசர்ஜன ஊர்வலம் நடந்ததால், முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று மழைக்கு மத்தியிலும் குடைகளை பிடித்தபடி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்