நாளை விநாயகர் சதுர்த்தி விழா: சேலத்தில் பூக்கள் விலை உயர்வு குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
சேலம்,
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு நேற்று காலை விவசாயிகள் அதிகளவு பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.500 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.1,000-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.300 வரை விற்பனையான சன்னமல்லி நேற்று ரூ.600-க்கும், கடந்த வாரம் ரூ.200 வரை விற்கப்பட்ட காக்கட்டான் நேற்று ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளை அரளி
கலர் காக்கட்டான் கிலோ ரூ.360-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.260-க்கும், செவ்வரளி ரூ.300-க்கும், நந்தியா வட்டம் ரூ.250-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், சாமந்தி ரூ.150-க்கும், கோழிக்கொண்டை ரூ.100-க்கும் விற்கப்பட்டன. வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
விலை உயர்வால் அவர்கள் பூக்களை குறைவாக வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.