சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவை யொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.

Update: 2022-08-31 16:33 GMT


இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவில்களில் சிறப்பு பூஜை

அந்த வகையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கணபதி ஹோமமும், 10 மணிக்கு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராபதி விநாயகர், விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில், விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வலம்புரி கோட்டை விநாயகர், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி பிள்ளையார், விழுப்புரம் ரெயிலடி விநாயகர், கோவிந்தசாமி நகர் அமிர்தகணபதி, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள விநாயகர், தோகைப்பாடி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிலைகள் வைத்து வழிபாடு

விழுப்புரம் அருகே காணையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 8 அடி உயரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான நவதானியங்களால் விநாயகர் சிலை அமைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டை கடலை, சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்டவைகளை படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதுபோல் முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பழ வகைகள், சுண்டல், கொழுக்கட்டை, பொரி ஆகியவற்றை படையலிட்டும் விநாயகரை குடும்பத்துடன் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்