முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
கடலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 1200 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கடலூர்:
2022-23-ம் ஆண்டுக்கான கடலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மண்டலக்குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி உள்பட பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தொடர்ந்து 12 வயது முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம், கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதில் இருந்தும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த குழு விளையாட்டு போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது. நாளை (புதன்கிழமை) வளைகோல் பந்து, தடகளம், மேசைப்பந்து போட்டிகள், 16-ந்தேதி (வியாழக்கிழமை) நீச்சல் போட்டிகளும் நடக்கிறது.
தடகளம்
17, 18-ந்தேதிகளில் கல்லூரிகளில் பயிலும் 17 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கான சிலம்பம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளும், 19 முதல் 22-ந்தேதி ஆக்கி, தடகளம், மேசைப்பந்து போட்டிகளும், பொதுப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (15 வயது முதல் 35 வயது வரை) குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது.
24,25-ந்தேதிகளில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் கபடி, தடகளம், இறகுப்பந்து, வாலிபால், சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடக்கிறது. 27-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், இறகுப்பந்து, சிறப்பு வாலிபால், சிறப்பு கபடி மற்றும் எறி பந்து ஆகிய போட்டிகளும் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ-மாணவிகள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 84 பேர் பதிவு செய்துள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.