இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளன.

Update: 2022-06-09 15:27 GMT

ராமநாதபுரம், 

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளன.

கலைப்போட்டி

ராமநாதபுரத்தில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. கலைத்துறையில் சிறந்து விளங்குகிற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 அரசு பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 18-ந் தேதி ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 போட்டிகள் காலை 9 மணி முதல் நடைபெறும்.

கிராமிய நடனம்

குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதி இல்லை. தனி நபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள். குரலிசை போட்டியிலும் நாதசுவரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட், தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கிற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம் புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள், போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

மாநில போட்டி

ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் மூலம் வாயிலாக பெறலாம். அல்லது கலை பண்பாட்டுத் துறையின் மதுரை மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்