புதிய தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்ல ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
புதிய தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.;
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் முதலாவது ஜி20 கல்விப் பணிக்குழு கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2-வது நாள் கூட்டம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தலைமையில் நடந்த ஜி20 கல்விப் பணிக்குழு கூட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-
ஜி20 கல்விப் பணிக்குழு சிறந்த தரமான கல்வியை மேம்படுத்துவதற்கான பொதுவான முன்னுரிமைகள், பொதுவான நடவடிக்கைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டுவதற்கு உறுப்பு நாடுகளுக்கு சிறந்த வாய்ப்பு அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கின்படி அனைவருக்கும் சமமான நீடித்த ஒட்டுமொத்த, உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமாகும்.
கல்வி என்பது வளர்ச்சிக்கான முக்கிய அம்சம். மக்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கு அது இன்றியமையாதது. கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை, பணி, மற்றவர்களுடனான உரையாடல் ஆகியவற்றில் படிப்படியான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்கள் உள்பட அனைவரும் அறிவு, திறன் ஆகியவற்றை 21-ம் நூற்றாண்டில் சமமாக பெறுவதற்கான கல்விமுறை தேவைப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமான, பொறுப்புமிக்க வாழ்க்கையை வாழ முடியும்.
குறைந்த செலவில் தேவையான உயர்தர கல்வியை அடைவதற்காக தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ இந்தியா தொடங்கியுள்ளது. குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி, பள்ளி இடைநிற்றலை தடுத்தல், புதுமையான கற்பித்தலை அறிமுகம் செய்தல், ஆசிரியர்களின் பயிற்சியில் கவனம், கற்பித்தல்-கற்றல் நடைமுறையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும்.
கல்வி மற்றும் இதர துறைகளில் ஜி20 உறுப்பு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்தியா மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. நமது குறிக்கோளை அடைவதற்கு இது ஒரு வாய்ப்பு.
பொதுவான எதிர்கால திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகளை அடைவதற்கு நமக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமது பொதுவான எதிர்கால குறிக்கோள்களை கட்டமைக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் இந்தோனேஷியா நாட்டு பிரதிநிதி யுவான் சயாரில், பிரேசில் பிரதிநிதி நடாலியா கேப்ரல் டி ரகோ பேரஸ் மற்றும் யுனெஸ்கோ, யுனிசெப், ஓஇசிடி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு, சர்வதேச கல்வி அமைப்புகள், சமத்துவமான கல்வி, தரமான கல்வி ஆகியவை பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் அளித்த பேட்டி வருமாறு:-
சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்று. அதிலும் அந்த மாநாட்டின் கல்விப் பணிக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடப்பது மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இதில் 29 நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கல்வியின் தரம், அதற்காக உறுப்பினர் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்வது, ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது, கல்வி இடைநிற்றலை குறைப்பது, புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது, அறிவு பகிர்வு ஆகியவை பற்றி 3 நாட்களாக ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவின் கல்வியின் பெருமைகள் மற்ற நாடுகளுக்கும் போய்ச் சேருகிறது. மற்ற நாடுகளின் கல்வி நடைமுறைகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அளித்துள்ளது. உலக நாடுகளுக்கு இந்த கல்விக்கொள்கை செல்கிறது. திறன் மேம்பாடு பற்றியும் இந்த கூட்டங்களில் பேச உள்ளனர். இந்தியாவில் மிகச்சிறந்த மனித ஆற்றல் உள்ளது. அதை மேம்படுத்த 'ஸ்கில்' இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் இளைஞர்களின் திறமை பட்டை தீட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.