திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு-சாலை மறியல்

கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு-சாலை மறியல்:காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு

Update: 2023-10-09 18:45 GMT


திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் நிறைவாக கூட்டியக்கத்தின் தலைவர் மாசிலாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த குறுவை நெல் மகசூலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 13 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியையும் தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் டெல்டா விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் பிரகாஷ், த.மு.மு.க. தொழிற் சங்க மாவட்ட செயலாளர் பாட்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பவுன்ராஜ், மக்கள் அதிகாரம் மண்டல செயலாளர் சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலத்தில் காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்