காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-02 10:20 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சியில் மாதாந்திர கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் குமரகுருநாதன் முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 83 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

இதில், பல்வேறு தீர்மானங்களுக்கு மாநகராட்சி உறுப்பினர்கள் விளக்கங்கள் கேட்டு பெற்றனர். சில தீர்மானங்கள் மீது விவாதங்களும் நடைபெற்றது.

குறிப்பாக, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கருணாநிதிக்கு வெண்கல உருவ சிலை நிறுவ கோரிக்கை வைத்து, சிலை நிறுவுவது குறித்த தகவலை மாநகராட்சியின் பார்வைக்கும், முடிவுக்கும் வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு மாநகராட்சி அனுமதி வழங்க வேண்டும் எனவும் செலவினத்தை பொது நிதியில் மேற்கொள்ளலாம் எனவும் கூறினார்.

இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்களின் ஏகோபித்த வரவேற்புடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலை வைக்க அனுமதி கோரி ஆணையரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது கருணாநிதியின் சிலை வைக்கும் செலவை பொது நிதியிலிருந்து செலவு செய்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான ஆவின் நிறுவனம் தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகம் அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டு வருகிறது. அதுபோல், காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக காஞ்சீபுரம் மாநகராட்சி உள்ளிட்ட 14 இடங்களில் ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்