சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.;
சென்னை,
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, ரூ.2.50 கோடியில் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நவீன கருவிகள், ரூ.25 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ரூ.75 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட நூலகம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வடசென்னையில் வாழும் மக்கள் மற்றும் வடசென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகள் என்பதால் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடசென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதி மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு அனைத்து பரிசோதனைகளும் (சர்க்கரை நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், காது மற்றும் கண் பரிசோதனை உட்பட) மேற்கொள்ள ஆணைப்பிறப்பிக்கப்பட்டு இந்த முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நூலகம்
புதிதாக தொடங்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் மார்பக சிறப்பு பரிசோதனை 'மாமோகிராம்' கருவி மற்றும் மின் ஒலி இதய வரைவு எகோ கருவிகள் ரூ.2.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளால் ஏற்படும் வலியை போக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வலி நிவாரண மையமும், முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் ரூ.75 லட்சத்தில் புணரமைக்கப்பட்ட மாணவர் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வடசென்னை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர் கீதா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.