முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை,
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும்படி, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை கண்டித்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் போராட்டத்துக்கு பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு, மைசூருவுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் நிறுத்தம்
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து 48 அரசு பஸ்களும், பிற பகுதிகளில் இருந்து 110-க்கும் மேற்பட்ட பஸ்களும் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பெங்களூரு, மைசூரு மார்க்கமாக தினமும் இயக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை என்றும், அதற்கு முன்பு புறப்பட்ட பஸ்கள் அனைத்தும் பெங்களூரு, மைசூருவுக்கு அதிகாலைக்குள் சென்றுவிடவும், அதன்பின் செல்லும் பஸ்கள் தமிழ்நாட்டின் எல்லை பகுதியான அத்திப்பள்ளி வரை செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், சுமார் 80 தனியார் ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சேவைகள் இன்று நிறுத்தப்படுவதாக் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறினர்.