குழம்பு சரியில்லை என்று கூறியதால் விரக்தி:தூக்குப்போட்டு பெண் தற்கொலை-கணவரிடம் போலீசார் விசாரணை

குழம்பு சரியில்லை என்று கூறியதால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-27 18:45 GMT

பொள்ளாச்சி

குழம்பு சரியில்லை என்று கூறியதால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வெண்ணிலா (20). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குரும்பபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.

மேலும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது காமராஜ் குழம்பு சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் காமராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் மாலையில் குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வெண்ணிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலைக்கு சென்று காமராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் அங்கு சென்று, பெண்ணிடம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் காமராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்