தஞ்சை வண்டிகார தெருவை சேர்ந்த பாபு (வயது 46) என்பவர் தஞ்சை பழைய பஸ்நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவர் எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள புது ஆற்றின் படித்துறையில் நின்று துணி துவைத்து விட்டு குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி பாபுவை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.