தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 2 வேன்களில் கடத்தப்பட்ட 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

ரேஷன் அரிசி;

Update: 2022-12-17 19:30 GMT

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 2 சரக்கு வேன்களில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சரக்கு வேனின் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரோந்து

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஆசனூர், கேர்மாளம், மலைப்பகுதியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், முருகன், போலீசார் சென்னிமலை, குமார், பிரபுகுமார் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். கேர்மாளம் வன சோதனை சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து சரக்கு வேனை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் கேர்மாளத்தை சேர்ந்த பசுவண்ணா (வயது 38) என்பதும், ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பசுவண்ணாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து ஆசனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

பறிமுதல்

இதேபோல் தாளவாடியை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள குருபரக்குண்டி அருகே வருவாய் ஆய்வாளர் தர்மராஜன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், 'அந்த சரக்கு வேனில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை,' வருவாய்த்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில், 'அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முகமது அலி (48) என்பதும், அவர் சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்குவேனையும் வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்