மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு
மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஸ்பிக்நகர்:
மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீர் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சாதுரியமாக சாலைஓரத்தில் நிறுத்தியதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலையில் புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தூத்துக்குடி- முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, பஸ்சிற்குள் திடீரென புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அதிகளவில் புகை வெளியேறியதால் பஸ் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட டிரைவர் ஸ்பிக்நகர்பஸ் நிறுத்தம் அருகே சாலைஓரத்தில் பஸ்சை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். அப்போது பஸ்சின் பின்பக்கத்தில் இருந்து புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது. என்ஜினை ஆப் செய்ததால் புகை வருவது நின்றது. இதனைத் தொடர்ந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு பஸ்சை சரி செய்து எடுத்து சென்றனர்.