கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்துபொதுமக்கள் தற்காத்து கொள்ள வழிமுறைகள்
கரூர் மாவட்டத்தில் கோடைகால தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றிட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
போதுமான அளவு தண்ணீர்...
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட, போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்ல வேண்டும், ஓ.ஆர்.எஸ். கரைசல், எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிர்க்கவும். பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள்
குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. இளநீர் போன்ற திரவங்களை பருக கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை கண்டறிய குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகள்
கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும். போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது.
மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் தொடக்கத்திலேயேவெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.