லாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்; 7 பேர் படுகாயம்

லாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்; 7 பேர் படுகாயம்

Update: 2023-02-20 19:36 GMT

திருவையாறு அருகே லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

லாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்

திருவையாறிலிருந்து மருவூர் மணல் குவாரிக்கு நேற்று காலை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூரை சேர்ந்த பாண்டிசெல்வி (வயது35), மகாலட்சுமி (55), வீரநாகஜான்சி (26), காயத்ரி (14), பாலமுருகன் (34), சேசு (60), கோகுல் (26) ஆகிய 7 பேர் சரக்கு ஆட்டோவில் சென்று குலதெய்வகோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடையத்தோப்பு மெயின்ரோட்டில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த 7 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலைமறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தணிகாசலம் தலைமையில் வைத்தியநாதன்பேட்டை கடைய தோப்பு மெயின்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவையாறு தாசில்தார் பழனியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்தபகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்