8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் இ.பெரியசாமி நடத்தி வைத்தார்.;
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் அரசு சார்பில் மணமக்களுக்கு புதிய பட்டு ஆடைகள், 4 கிராம் தங்க தாலி மற்றும் கைக்கடிகாரம், கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, சில்வர் பாத்திரம், பாய், தலையணை, குத்துவிளக்கு உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களையும் அமைச்சர் வழங்கி பேசினார்.
விழாவில் அவர் பேசுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்துக்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமண விழா நடத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 22 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.