இலவச கண் பரிசோதனை முகாம்
காட்பாடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் 20-ம் ஆண்டு கண் பரிசோதனை முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. முகாமிற்கு கே.கோவிந்தராஜூ நாயுடு தலைமை தாங்கினார். கே.ஆர்.விஜயன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், கதிர்ஆனந்த் எம்.பி., லட்சுமணன் முதலியார் ஆகியோர் கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
டாக்டர் திருவேங்கடம் கிருஷ்ணன் மேற்பார்வையில், மருத்துவ குழுவினர் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 690 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வெள்ளை எழுத்து, கண் புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கருவிழியில் புண், குழந்தைகளின் கண் நோய் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இலவச அறுவை சிகிச்சைக்கு 168 பேர் பரிந்துரை செய்யப்பட்டு, இலவசமாக பஸ்கள் மூலம் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 150 பேருக்கு இலவச சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர். மெடிக்கல் தணிகைவேல், ஆரணி கார்த்தி, ஜெயச்சந்திரன், யோகேந்திரன், ஜெய்சங்கர், ரகு, குறிஞ்சி நர்சிங் கல்லூரி செவிலியர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். சக்தி சாய் சேவா சங்கத்தினர் சேவைப் பணியில் ஈடுபட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். முகாம் நடத்துவதற்கு ஆதிலட்சுமி திருமண மண்டபத்தை பாலமுரளி இலவசமாக வழங்கினார்.