2-ம் நிலை காவலர்-தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
2-ம் நிலை காவலர்-தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி பெரம்பலூரில் 11-ந்தேதி தொடங்குகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன் பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 17-ந்தேதி இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 வயது முதல் 26 வயது வரை ஆகும். வயது வரம்பு சலுகை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 28 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் 31 வயது, ஆதரவற்ற விதவை 37 வயது, முன்னாள் ராணுவத்தினர் 47 வயது ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் நேரடியாக தொடங்கப்படவுள்ளது. எனவே இத்தேர்விற்கு, தயாராகி கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் தங்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9499055913 என்ற செல்போன் எண் மூலமாகவோ அணுகி பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.