போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது.;
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள்
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக எஸ்.எஸ்.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இந்த அறிவிக்கையில் எஸ்.எஸ்.சி. தேர்வின் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களும், எஸ்.பி.ஐ. தேர்வின் மூலம் 5,486 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போட்டி தேர்வர்கள் இணையவழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்.எஸ்.சி. தேர்வு விண்ணப்பிக்க வருகிற 8-ந் தேதியும், எஸ்.பி.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதியும் கடைசிநாளாகும்.
கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்து போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுனர்களால் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு
போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் இந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த இலவச வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.