160 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
160 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்;
கொரடாச்சேரி
கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவிகளுக்கு ரூ.11 லட்சத்து 13 ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமுதாய வளர்ச்சியினால் நாம் அனைவரும் இன்று கல்வியினை மிக எளிதில் கற்று வருகிறோம். அதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்கு கல்வியானது மிக முக்கியமான ஒன்றாகும். தமிழக அரசு பெண்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இலவச பஸ் பாஸ், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாணவர்களுக்கு அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
எதிர்காலம் நல்ல முறையில் அமையும்
கல்வி மாணவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படையானது ஆகும். கல்வி ஒன்று மட்டுமே வாழ்க்கை முழுவதும் உங்களுடன் பயணிக்கும். மாணவர்களாகிய நீங்கள் உங்களது பள்ளி காலத்திலும், கல்லூரி காலத்திலும் முறையாக பயின்றால் மட்டுமே உங்களுடைய எதிர்காலம் நல்ல முறையில் அமையும்.
திருவாரூர் மாவட்டத்தில் 91 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மொத்தம் 11 ஆயிரத்து 908 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 கோடியே 4 லட்சத்து 47 ஆயிரத்து 942 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, ஒன்றியக்குழு தலைவர் உமா பிரியா பாலசந்தர், ஒன்றிய துணைத்தலைவர் பாலசந்தர், பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, முதன்மைக்கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி, தலைமையாசிரியர் பூந்தமிழ்பாவை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.