127 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
அருப்புக்கோட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 127 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 127 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி கல்வி நிலைய முதல்வர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 127 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழிற்பயிற்சியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களை தரமாக வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதின் படி கடந்த காலங்களை போல் இல்லாமல் தரமோடும், உறுதியோடும் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை
தொழில் கல்வி மாணவர்களுக்கு சீருடைகள், காலணிகள் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளுக்கு நான் செல்லும்போதெல்லாம் பெரும்பாலானோர் என்னிடம் வேலை கேட்டு என்னை அணுகுகிறார்கள்.
கடந்த காலங்களில் கிராம உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்களே விண்ணப்பித்து பணியில் சேர்வார்கள். அந்த நிலைமை மாறி தற்போது பட்டதாரி படித்தவர்கள் பெரும்பாலானோர் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இனி வரும் காலங்களில் மாணவர்கள் அரசு பணியை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொழிற்பேட்டை
திருச்சுழி மற்றும் சாத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை வர உள்ளது அதேபோல் சென்னையை சுற்றிலும் பல இடங்களில் பல புதிய தொழிற்சாலைகள் வரவுள்ளது. மாணவர்கள் சிறந்த முறையில் படித்து திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா, தாசில்தார் அறிவழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றியச்செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், பாளையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, தி.மு.க. நிர்வாகிகள், தொழிற்பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.