செல்போன்கள் மூலம் நூதன மோசடி
செல்போன்கள் மூலம் நூதன மோசடியில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'சென்னைக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.
விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.
இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-
நவீன தொழில்நுட்பம் வேண்டும்
தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் குடும்பத்தலைவி கலையரசி:- ஒருவர் நமக்கு பரிசுகள் கொடுப்பதாகவோ அல்லது இலவசமாக கொடுப்பதாகவோ கூறி இணையதள 'லிங்க்'களை அனுப்பும்போது, அதனை நாம் உடனடியாக நம்பி ஏமாந்து விடுகிறோம். ஆனால் அதனை அவர்கள் நமக்கு கொடுப்பதனால் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கும்?. நமக்கு அதனை ஏன் கொடுக்க வேண்டும்? என்பதை நாம் யோசிக்க தொடங்கினால், நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்ய இணையதள குற்றப்பிரிவுக்கு தற்போது உள்ள வசதிகள் போதுமா? என்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் பெரும்பாலும் இணையதள மோசடிகள் அனைத்துமே ஆசையை தூண்டியே நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் எந்த நிலையிலும் உழைப்பால் கிடைப்பது தவிர மற்ற அனைத்தும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும்.
செல்போன் எண்கள், தகவல்கள் திருட்டு
திருமழபாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாரதிதாசன்:- தற்போதைய நவீன உலகத்தில் அனைவரது கையிலும் செல்போன் வந்துவிட்டது. இதனால் ஆன்லைனில் நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பல்வேறு பயன்பாட்டிற்காக அரசு அங்கீகரிக்காத பாதுகாப்பற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நமது செல்போன் எண்கள், செல்போனில் உள்ள தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டு ஆன்லைனில் விற்கப்படுகின்றன. இதுபோன்று மோசடியில் ஈடுபடும் கும்பல்கள், செல்போன் எண்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றுக்கு போன் செய்தோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ தொடர்பு கொண்டு, பொதுமக்களிடம் ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். உங்கள் செல்போனில் இதுபோன்ற தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யாமலும், சமூக வலைதள கணக்குகளின் சுயவிவரப் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதன் மூலமும், இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க ஓரளவு வாய்ப்புள்ளது.
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
அரியலூரை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன்:- இணைய குற்றங்கள் என்பது தகவல் தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்கள் ஆகும். இதன்மூலம் பல்வேறு மோசடிகள் செய்யப்படுகிறது. செல்போனில் இணையதளம் மற்றும் மற்ற பல சாதனங்களை பயன்படுத்தியும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை திருடுவது. தகவல்களை ஆழிப்பது. இணையத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது. மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது. சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது. இணையவழி பொருளாதார குற்றங்கள், கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது போன்றவையும் நடக்கின்றன. இதுபோன்ற மோசடிகள் மற்றும் குற்றங்களை தடுக்க, மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செல்போன், இணையதளங்களை பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும்.
பணம் வரவில்லை
பெரம்பலூரை சேர்ந்த மளிகை கடைக்காரர் தியாகராஜன்:- இன்றைய சூழ்நிலையில் ஆன்லைன் வர்த்தகமின்றி கடை நடத்துவது என்பதை சாத்தியமற்றதாகவே கருத வேண்டி உள்ளது. எனினும் இதில் நன்மைகள் இருந்தாலும் பல இன்னல்களையே சந்திக்க நேரிடுகிறது. வாடிக்கையாளர்கள் பலரும் பொருள் வாங்குவதற்கு கடைக்கு வரும்போது பை எடுத்து வருவதை எப்படி காலப்போக்கில் மறந்தார்களோ, அப்படியே பணம் என்பதையும் மறந்து போனார்கள். பொருட்களுக்கான தொகையை கியூ ஆர் கோடு மூலமாகவே அனுப்புகின்றனர். பல நேரங்களில் அவர்கள் செலுத்திய பணம், அவர்களின் வங்கி கணக்கிற்கு திரும்ப சென்று விடுகிறது. பிறகு தெரிந்தவர் என்றால் அவர்களிடம் நாம் கேட்க முடிகிறது. இல்லையெனில் அது கடை நடத்துபவர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. ஒரு முறை வாடிக்கையாளர் யு.பி.ஐ. மூலம் அனுப்பிய ரூ.10 ஆயிரம் அவரது வங்கி கணக்கிற்கு சென்று விட்டது. ஆனால் எனது வங்கிக் கணக்கிற்கு வரவே இல்லை. அந்த வாடிக்கையாளரிடம் நான் எத்தனை முறை எடுத்துக் கூறியும் இன்று வரை அந்த பணம் எனக்கு வந்து சேரவில்லை. இதுபோன்ற பல்வேறு வகையில் மோசடி நடக்கிறது.