செல்போன்கள் மூலம் நூதன மோசடி

செல்போன்கள் மூலம் நூதன மோசடி குறித்து பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.;

Update: 2023-03-14 18:45 GMT

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'சென்னைக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-

பாதுகாப்பு குறைந்து விட்டது

சிதம்பரம் வினோத்குமார்:- ஆண்ட்ராய்டு செல்போன் வந்ததில் இருந்து வங்கியில் உள்ள பணத்திற்கு பாதுகாப்பு குறைந்து விட்டது. தினமும் செல்போனில் மோசடி நபர்கள் தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு வகையில் பேசி மக்களின் வங்கி கணக்கு எண்களை தெரிந்து கொண்டு நூதன முறையில் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் தங்களது உழைப்பின் மூலம் மிகவும் கஷ்டப்பட்டு வங்கியில் சேர்த்து வைக்கும் பணத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆகி விட்டது. வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? உடனடியாக இந்த லிங்க் மூலம் இணையுங்கள் என்றும், உங்கள் மொபைல் நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்க் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்று பல்வேறு வகையில் மக்களை தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்கின்றனர். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணத்திற்கு பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். வீட்டில் பணம் வைத்திருந்தால் திருட்டு தொல்லை இருக்கிறது என்று வங்கியில் வைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நூதன முறையில் பணத்தை ஏமாற்றி எடுத்து சென்று விடுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

விழிப்பாக இருக்க வேண்டும்

மங்களூர் பெரியசாமி:- தினந்தோறும் நிறைய செல்போன் இணைப்புகள் வருகிறது. அதில் கடன் வேண்டுமா, கிரெடிட் கார்டு வேண்டுமா, கிரெடிட் கார்டு மூலம் கடன் வேண்டுமா? என்று மயக்கும் குரலில் பெண்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய குரலுக்கு மயங்கும் பலர் அவர்கள் கேட்கும் விவரங்களை கொடுத்து விடுகின்றனர். இதன் மூலம் உழைத்து சேமித்து வைத்த வங்கி கணக்கில் இருந்து ஏராளமான பணம் களவாடப்படுகிறது. இதனை ஒரு சிலர் மட்டுமே புகாராக தெரிவிக்கின்றனர். பலர் விவரம் தெரிந்த நீங்களே இப்படி ஏமாறலாமா? என கேட்பார்களோ என நினைத்துக்கொண்டு வெளியில் கூட கூற மறுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தனியார் நிறுவன ஆப் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்கியுள்ளீர்கள். அதனால் உங்களுக்கு அந்த நிறுவனம் மூலம் உங்களுக்கு கார் பரிசாக விழுந்துள்ளது. அதற்கு முதலில் நீங்கள் ரூ.25 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்று கூறி பேசுகிறார்கள். இதை நம்பி நாம் ரூ.25 ஆயிரத்தை கட்டினால், கார் கிடைக்காது. நாம் கட்டிய பணத்தை தான் இழப்போம். ஆகவே எதையும் உறுதிப்படுத்தாமல் நாம் சமூக வலைத்தளங்களில் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது. இதில் ஏமாற்றப்படுபவர்கள் சாதாரண மக்களை விட விவரம் தெரிந்தவர்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். இது போன்ற மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இந்த மோசடியில் இருந்து தப்பிக்க நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

கோபம் தான் வரும்

விருத்தாசலம் டிரைவர் ஜெயகிருஷ்ணன்:- முன்பெல்லாம் செல்போனில் 10 எண்களுக்கு மேல் எண்கள் வந்தால் அது கம்பெனி அழைப்பு என்று எடுக்காமல் விட்டுவிடுவோம். ஆனால் இப்போது வழக்கமான எண்களை போல் அழைப்புகள் வருகிறது. இதை நாம் எடுத்து பேசினால், நாங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், கிரெடிட் கார்டு வேண்டுமா?, கடன் வேண்டுமா?, இன்சூரன்ஸ் பாலிசி கட்டுங்கள், உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தர தயாராக இருக்கிறோம் என்று பேசி தொல்லை தருகிறார்கள். சில நேரங்களில் வாகனத்தில் செல்லும் போதும் அழைப்பு வரும். அப்போது இதேபோல் பேசினால், கோபம் தான் வரும்.

ஆன்லைன் மூலம் கடன் வாங்குகிறவர்கள், வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். நம்முடைய செல்போன் எண்களை எப்படி எடுப்பார்கள் என்றே தெரியவில்லை. சிலர் செல்போன்களுக்கு வரும் லிங்கை தெரியாமல் கிளிக் செய்தால், அவர்களது செல்போனை ஹேக் செய்து, அனைத்து தகவல்களையும் திருடி விடுகின்றனர். இதனால் தனி மனித சுதந்திரம் பறிபோய் விடுகிறது. வங்கியில் இருந்து பேசுகிறேன் என சென்னை, மும்பை, டெல்லியில் இருந்தும் அழைப்புகள் வருகிறது. இந்த அழைப்புகளை தவிர்க்க வேண்டும். ஆகவே தேவையற்ற லிங்குகள் வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். மூலமாக வந்தால் உடனடியாக அவற்றை தொட்டு பார்க்கக்கூடாது. தேவையற்ற செய்திகளை உடனுக்குடன் டெலிட் செய்து விட வேண்டும்.

கைரேகை பதிவு

குமராட்சி நெய்வாசல் விவசாயி பாலு:- வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தான் அதிக அளவில் மோசடி நடக்கிறது. இது மட்டுமில்லாமல் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. அதற்காக நீங்கள் குறைந்த தொகையை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு கட்ட வேண்டும் என்று பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். சமீபத்தில் கூட காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு பெண்ணை ஏமாற்றி உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று ஓ.டி.பி. எண்ணை கேட்டு வாங்கி ரூ.13 ஆயிரத்தை ஏமாற்றி விட்டனர். இது போன்ற மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்ய வேண்டும். பொதுமக்களும் யாரிடமும் ஓ.டி.பி. எண்ணை வழங்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பணத்தை எடுப்பதற்கு ஓ.டி.பி. மட்டுமின்றி கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று இருந்தால் இது போன்ற மோசடியை தவிர்க்கலாம்.

சேத்தியாத்தோப்பு வியாபாரி சரவணன்:- தொலைபேசி மூலம் ஏ.டி.எம். எண்ணை கேட்டு ஏமாற்றும் வேலை பல ஆண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. இதை தடுக்க அரசு முன்வர வேண்டும். பாமர மக்கள் கூலி வேலைக்கு சென்று அதை சேமித்து வைக்க வங்கியை தான் நாடுகிறார்கள். அந்த வங்கியிலும் அதிகாரிகள் பேசுவதாக கூறி, பாமர மக்களின் பணத்தை வேட்டையாடி வருகிறது ஒரு கும்பல். இந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்