அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-07-22 19:36 GMT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுப்பையா நகரை சேர்ந்த சுந்தரலிங்கத்தின் மனைவி ஜெயந்தி மாலா (வயது 54). இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகன் ஸ்ரீதருக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்தை பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன் (42) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி பெற்றுக்கொண்டு, இதுவரை எனது மகனுக்கு வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் நீலகிரி மாவட்டம், உபத்தலை பழந்தோட்டத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவி தங்கமணி (50) பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாந்தினிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஈஸ்வரன் ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு, எனது மகளுக்கு இதுவரை வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை நேற்று கைது செய்தனர். கைதான ஈஸ்வரன் இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்