ரூ.4½ லட்சம் சீட்டு பணத்தை தராமல் மோசடி
ரூ.4½ லட்சம் சீட்டு பணத்தை தராமல் மோசடி செய்வதாக போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் லாரி டிரைவர் புகார் செய்துள்ளார்.
வேலூரை அடுத்த மேட்டு இடையம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40), லாரி டிரைவர். இவர் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் புகார் மனு அளித்தார். அதில், கணியம்பாடியை சேர்ந்த 2 பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் 2 ஏல சீட்டுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 38 மாதங்கள் பணம் செலுத்தினேன். எனது அவசர தேவைக்காக ஏலத்தில் சீட்டு எடுக்க முயன்றபோது அதனை தர மறுத்து விட்டனர். அவர்களின் கமிஷன் மற்றும் நான் செலுத்தாத 39, 40-வது சீட்டு பணத்தை தவிர்த்து அவர்கள் ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் எனக்கு தர வேண்டியிருந்தது. சில மாதங்கள் அலைக்கழித்து பின்னர் முதற்கட்டமாக ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் கொடுத்தனர். மீதமுள்ள பணத்தை விரைவில் தருவதாக கூறினர்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார்கள். பணத்தை கேட்டால் அவதூறாக பேசி மிரட்டல் விடுக்கிறார்கள். எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக சீட்டு பணம் கட்டினேன். எனது பணத்தை மீட்டு தந்து மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.