ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி கே.சாத்தனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 69). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் திருச்சி ரேஸ்கோர்ஸ்ரோடு கேசவநகரை சேர்ந்த லிங்கசேகர் என்பவருக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தார். இதற்காக ஒரு ஏக்கர் ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வீதம் 47 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விலை பேசினார். கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முன்தொகையாக ரூ.95 லட்சத்தை நேரடியாகவும், வங்கி பண பரிமாற்றம் மூலமாகவும் கொடுத்தார்.
இதற்காக பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு நடராஜன் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் லிங்கசேகரும், அவரது மகன் ராஜேஸ்வர பாண்டியனும் நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும், அல்லது தனது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று நடராஜன் அவர்களிடம் கேட்டார்.
ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காததால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து நடராஜன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி லிங்கசேகர், அவரது மகன் ராஜேஸ்வரபாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.