பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சம் மோசடி
கடன் பெற்றுத்தருவதாக கூறி வாங்கிய காசோலை மூலம் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்து மோசடி செய்த ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
கடன் பெற்றுத்தருவதாக கூறி வாங்கிய காசோலை மூலம் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்து மோசடி செய்த ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருந்துக்கடை மேலாளர்
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வினிதா (வயது 45). இவர் ஒலம்பசில் உள்ள மருந்துக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனியார் வங்கியில் கடன் பெறுவதற்காக சூலூர் கலங்கல் ரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் கார்த்திக் (28) என்பவரை அணுகினார். உடனே அவரும் கடன் பெற்று தருவதாக கூறி வினிதாவி டம் பல்வேறு ஆவணங்களை வாங்கினார். மேலும் அவரது கையொப்பமிட்ட வெற்று காசோலையையும் வாங்கி உள்ளார்.
வெற்று காசோலை
இதையடுத்து வினிதாவுக்கு வங்கியில் இருந்து கடன் அனுமதிக்கப்பட்டு அவருடைய வங்கி கணக்கில் கடன் தொகை ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 536 வரவு வைக்கப்பட்டது. இதை அறிந்த வங்கி ஊழியர் கார்த்திக் வினிதா ஏற்கனவே கையெழுத்திட்டு கொடுத்த வெற்று காசோலையில் ரூ.4 லட்சம் என்று எழுதி பணத்தை எடுத்துள்ளார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வினிதா கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் ரூ.4 லட்சத்தை மோசடி செய்து விட்டார்.
வங்கி ஊழியர் மீது வழக்கு
இது குறித்து வினிதா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் கார்த்திக் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.