அதிக லாபம் தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி

கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2023-02-09 18:45 GMT

கோவை

கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரேடிங் நிறுவனம்

கோவை விமான நிலையம் அருகே உள்ள நேருநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 51). இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வேலி அமைத்து கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக கோவை காட்டூர் சென்றார். அப்போது அங்கு இருந்த 2 பேர் கணேசனுக்கு அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் இருவரும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ரூ.3 லட்சம் முதலீடு

மேலும் எங்கள் நிறுவனம் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றால் உங்களுக்கு டிரேடிங் தொடர்பாக ஆலோசனை கிடைக்கும் என்று கூறி உள்ளனர். உடனே கணேசனும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அந்த நிறுவன ஊழியர்கள், இங்கு முதலீடு செய்தால் மாதத்துக்கு 2 சதவீத வட்டி கொடுப்பதாகவும், 2 முறை 15 சதவீத லாபம் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து கணேசன் கடந்த 2019-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். அதற்கு மாதந்தோறும் வட்டியும், 2 முறை லாப தொகையும் கொடுத்தனர். இதை நம்பிய கணேசன், மேலும் 2 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

3 பேர் மீது வழக்கு

அதற்கு ஓரிரு மாதங்கள் முறையாக வட்டியும், லாப தொகையையும் வழங்கிய அந்த நிறுவனம் பின்னர் வழங்கவில்லை. இதனால் கணேசன் அந்த நிறுவனத்தக்கு சென்று, தனக்கு வட்டி கொடுக்க வேண்டாம், தான் முதலீடு செய்த ரூ.3 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அந்த பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை.

இந்த மோசடி குறித்து கணேசன், கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த டிரேடிங் நிறுவன மேலாளர் பாலசந்திரன், ஊழியர்கள் ராஜா, செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்