மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.21¼ லட்சம் மோசடி

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் பங்கு தொகையாக மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் தருவதாக கூறி முதலீ்ட்டாளர்களிடம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர்கள் உள்பட 5 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-01 19:07 GMT

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் பங்கு தொகையாக மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் தருவதாக கூறி முதலீ்ட்டாளர்களிடம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர்கள் உள்பட 5 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் நிறுவனம்

சேலம் வசந்தம் ஓட்டல் சாலையில் ஜே.எச்.டவர் என்ற வணிக வளாகத்தில் ஜஸ்ட்-வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாக இயக்குனராக பாலசுப்பிரமணியன் என்பவரும், இயக்குனர்களாக நிரஞ்சன், கமல் ஆகியோரும் இருந்து வந்தனர்.

இந்த நிறுவனத்தின் கிளை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கி வந்தது. திருச்சி கிளையில் கண்ணப்பன், பாபு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ரத்தினகிரி என்பவரின் மனைவி லதா (வயது 36) என்பவர் 2020-ம் ஆண்டு அவர்களுக்கு அறிமுகம் ஆனார்.

ரூ.26 லட்சம் முதலீடு

அப்போது அவர்கள், லதாவிடம், சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனம் வெளிநாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், நாங்கள் மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் பங்குதொகையாக தருகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

இதை நம்பி லதா மற்றும் 15 பேர் பல்வேறு நாட்களில் ரூ.26 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாலசுப்பிரமணியன், முதலீட்டாளர்களுக்கு உறுதிமொழி பத்திரம் வழங்கினார். பின்னர், முதல் மாதம் ரூ.26 லட்சத்துக்கு பங்கு தொகையான ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கினார்.

5 பேர் மீது வழக்கு

அதன்பிறகு, பங்கு தொகையும் கொடுக்கவில்லை. மேலும் முதலீட்டு தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்டும் அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் தங்களிடம் மோசடி செய்த ரூ.21 லட்சத்து 32 ஆயிரத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி லதா மற்றும் முதலீட்டாளர்கள் திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன், இயக்குனர்கள் நிரஞ்சன், கமல் மற்றும் கண்ணப்பன், பாபு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்