அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி
நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி செய்த தனியார் கம்பெனி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி செய்த தனியார் கம்பெனி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண் புகார்
நாகர்கோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா ரமீசா (வயது 38). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
குலசேகரபுரம் தெற்குவீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா (45). இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும் இதற்காக ரூ.1 கோடியே 25 ஆயிரம் தர வேண்டும் என்றார்.
ரூ.1 கோடி மோசடி
நானும் அவரது பேச்சை நம்பி பல தவணையாக ரூ.1 கோடியே 25 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்று கொண்டு அவர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
பின்னர் தான் அவர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் பண மோசடி செய்தது ெதரியவந்தது. எனவே பிரபா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கைது
இதுதொடர்பாக பிரபா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காட்டுவிளையில் பிரபாவை போலீசார் கைது செய்தனர்.