நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.1 கோடி மோசடி
வேலூர் தொழிலதிபரிடம் போலி ஆவணங்களை காண்பித்து நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர்.
இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர். சில மனுக்களை அந்தந்த பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். சில மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சில மனுக்களை மறுவிசாரணை செய்யவும் உத்தரவிட்டார்.
கே.வி.குப்பம் மேல்மாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பணியில் இருந்தபோது உடன் வேலை செய்த ஆசிரியரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். இதற்காக ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த ஆசிரியர் கடன் கேட்கவே ரூ.5 லட்சம் கொடுத்தார். பின்னர் எனது கணவர் ரூ.15 லட்சத்து 80 ஆயிரத்தை திரும்ப கேட்டபோது ரூ.1 லட்சம் கொடுத்தார். இந்த நிலையில் எனது கணவர் கொரோனா பாதிப்பால் திடீரென இறந்து விட்டார். ஆனால் எனது கணவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் அந்த ஆசிரியர் மோசடி செய்து வருகிறார். எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் தொழிலதிபர்
கே.வி.குப்பத்தை சேர்ந்த முன்னாள் ராணுவீரர் அளித்துள்ள மனுவில், நான் தற்போது பள்ளிகொண்டாவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் என்னுடைய ஊதியத்தை கொடுக்கவில்லை என்று கூறி என்னை எனது மகன் தாக்கினான். மேலும் நான் அவனை அடித்ததாக பொய் புகாரும் போலீசில் அளித்துள்ளான். இதற்கு எனது மனைவி மற்றும் மகள்கள் உடந்தையாக செயல்படுகின்றனர். எனது ஆவணங்கள் அவர்களிடம் உள்ளது. அதை பெற்று தரவேண்டும். மேலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.
வேலூர் வசூர் பேங்க் நகரை சேர்ந்த தொழிலதிபர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது அங்கு பணியாற்றிய ஒருவர் அறிமுகமானார். பின்னர் நான் வேலையை விட்டு, தற்போது கட்டுமான தொழில் செய்து வருகிறேன். இந்தநிலையில் சேலத்தில் பழகிய அந்த நபர் ஆன்லைன் வர்த்தக தொழில் செய்வதாக கூறினார். மேலும் அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். அதில் பங்குதாரராக சேர்ந்து கொள் என்றும் உனக்கு குறிப்பிட்ட சதவீத லாப தொகை தருவதாகவும் தெரிவித்தார். அதை நம்பி நான் அதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தேன். இதையடுத்து அவரும், அவரது மனைவியும் என்னிடம் ரூ.37 லட்சம் பெற்னர். இதையடுத்து மேலும் ரூ.83 லட்சம் வாங்கிக் கொண்டனர்.
இதற்கான ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்தனர். மேலும் அவர்கள் ஆவணங்களையும் என்னிடம் காண்பித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னர் அவர்கள் வழங்கியது போலியான ஆவணங்கள் என்று தெரியவந்தது. அவர்கள் என்னிடம் மோசடி செய்து, பணத்தை அபகரித்துள்ளனர்.
ஏமாற்றப்பட்டதை அறிந்த நான் அவர்களிடம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.