ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து விவசாயிடம் மோசடி

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து விவசாயிடம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-19 18:45 GMT

விவசாயி

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 61). விவசாயியான இவர் நயினார்கோவில் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். தனக்கு விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை எடுப்பதற்காக ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள அந்த வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்கு நின்ற வாலிபர் ஒருவர் சுப்பிரமணியனிடம் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் எனக்கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரகசிய எண்ணையும் கூறினார். பின்னர் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதுபோல் நடித்து தற்போது ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்று கூறி போலி ஏ.டி.எம். கார்டை சுப்பிரமணியிடம் கொடுத்தார்.

ரூ.42 ஆயிரம் மோசடி

அந்த கார்டை தன்னுடைய கார்டு என்று எண்ணிய சுப்பிரமணியன் அதை பெற்று கொண்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரின் செல்போனிற்கு ரூ.42 ஆயிரம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் வங்கிக்கு சென்று விசாரித்த போது 2 தவணைகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ரூ.22 ஆயிரத்திற்கு ஜவுளிக்கடைகளில் துணி வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணியன் இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்