ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடி: சினிமா பட தயாரிப்பாளர் கைது

ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட சினிமா பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-24 21:59 GMT

சென்னை,

சென்னை விருகம்பாக்கம் மகாதேவி நிவாஸ் நகரை சேர்ந்தவர் ஜான் ஜின்னி மேக்ஸ் என்ற ஜான் மேக்ஸ்(வயது 53). இவர், பிரபுசாலமன் இயக்கிய 'மைனா' படத்தை தயாரித்து உள்ளார். அதன்பிறகு சினிமா தொழிலை விட்டுவிட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இவர், 2018-ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்த விவசாயி மோகனவேல் (56) என்பவருக்கு வேப்பம்பட்டு ரேவதி நகரில் உள்ள 1,905 சதுர அடி கொண்ட காலி மனையை ரூ.9 லட்சத்துக்கு விற்றார். அதற்கான அசல் பத்திரத்தையும் மோகனவேலிடம் கொடுத்து அவரது பெயருக்கு பொது அதிகாரம் செய்து கொடுத்தார்.

மற்றொருவருக்கு விற்று மோசடி

பின்னர் சில நாட்கள் கழித்து ஜான் ஜின்னி மேக்ஸ், மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை வாங்கினார். பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் அவரது பெயரில் இருந்த பொது அதிகார பத்திரத்தை ரத்து செய்து, தமிழ்ச்செல்வன் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து, அதே இடத்தை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு விற்றுவிற்றார்.

இந்த மோசடி குறித்து அறிந்த மோகனவேல், நிலத்துக்காக தான் கொடுத்த ரூ.9 லட்சத்தை தரும்படி கேட்டார். ஆனால் ஜான் ஜின்னி மேக்ஸ் பணத்தை கொடுக்காமல் மோகனவேலை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கைது

இதனால் மனமுடைந்த மோகனவேல், இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனை படி கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை ஜான் ஜின்னி மேக்ஸ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்