பேஸ்புக் மூலம் பழகி ரூ.5 லட்சம் மோசடி

அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாக கூறி பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-30 18:45 GMT

அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாக கூறி பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக் பழக்கம்

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது முகநூல் பக்கத்தில் (பேஸ்புக்) அலெக்ஸ் எட்வர்ட் என்பவர் நண்பராக அறிமுகம் ஆகினார். அவர், தான் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாகவும், இந்தியா வரும்போது சிவக்குமாரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அலெக்ஸ் எட்வர்ட் இந்தியா வந்துள்ளதாகவும், தற்போது மும்பையில் இருப்பதாகவும் சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.

மேலும் தான் வரும்போது லட்சக்கணக்கான மதிப்பிற்கு அமெரிக்க டாலர்களை கொண்டு வந்துள்ளேன், இதனால் சுங்கவரித்துறையினர் வரி கட்ட வேண்டும் என்றுதன்னை பிடித்து வைத்துள்ளனர், தனக்கு இந்திய பணம் தேவைப்படுகிறது, சுங்கத்துறையினருக்கு அதை கட்டி முடித்த பின்னர், அந்த தொகையை அமெரிக்க டாலராக உங்களுக்கு திருப்பி தருவதாக சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.

ரூ.5 லட்சம் மோசடி

இதை நம்பிய சிவக்குமார் 8 தவணைகளில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 300 அவருக்கு அனுப்பி உள்ளார். பணத்தை பெற்று கொண்ட அலெக்ள் அதன் பின்னர்சிவக்குமாரின் தொடர்பை துண்டித்து விட்டாராம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இந்த மோசடி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நர்மதா, இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிவக்குமாரை ஏமாற்றிய நபர் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்